பணியகம் பற்றிய விபரம்
இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் என்றால் என்ன?

இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் (CRIB) தென்னாசிய பிராந்தியத்தின் முதலாவது கொடுகடன் தகவல் பணியகமாகும். அது கொடுகடன் பணியகச் சட்டத்தினால் (2008 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்கச் சட்டம் மற்றும் 1995 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்கச் சட்டம் என்பவற்றினால் திருத்தப்பட்டவாறான) 1990 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க கொடு கடன் பணியகச்சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது.

இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் சுயாதீனமான ஒரு நியதி அமைப்பாகவும், இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை பெரும்பான்மை பங்குகளை வைத்திருக்கும் அதேவேளை பொது / தனியார் துறை கூட்டாண்மையின் ஒன்றாகவும் இருந்து வருகின்றது. ஏனைய பங்குகள் பணியகத்தின் மற்றைய பங்குதாரர் அங்கத்துவர்களுக்கு மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன.

மூன்று தசாப்த காலத்திற்கு மேலாக இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் நாட்டின் வலுவான நிதி உட்கட்டமைப்பின் தூண்களில் ஒன்றாக இருந்து வந்திருப்பதுடன், இலங்கையில் கொடுகடன் கலாசாரத்தின் அத்திவாரத்தை பலப்படுத்துவதிலும், ஒட்டுமொத்தமாக வங்கித்தொழில் மற்றும் நிதித் துறையின் உறுதிப்பாட்டை உறுதிப்படுத்துவதிலும் மௌனமான ஒரு பங்களிப்பினை வழங்கி வந்துள்ளது. எமது முதன்மை வணிகக் குறிக்கோள் கொடுகடன் தகவல் பணியகச் சட்டத்தினால் விதித்துரைக்கப்பட்டுள்ளவாறு கொடுகடன் தகவல் பணியகத்தின் அங்கத்துவ நிறுவனங்கள் மற்றும் பொது மக்கள் தொடர்பாக சட்ட ரீதியான பணிப்பானையுடன் கூடிய பொறுப்புக்களை நிறைவேற்றி வைப்பதாகும்.

செயற்திறன் மிக்க கொடுகடன் தகவல் சேவைகளின் வழங்குநர் என்ற முறையில் எமது பொறுப்பின் மூலம் நாங்கள் வலுவான விதத்தில் பிணைக்கப்பட்டுள்ளோம். மேலும், எமது அனைத்து பாவனையாளர்களுக்கும் பெறுமதி சேர் சேவைகளை வழங்குவதன் மூலம் நாங்கள் இச்சேவைகளுக்கு குறைநிரப்புச் செய்து வருகின்றோம். அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதன் ஊடாக எமது உறுப்பினர்களுக்கு நாளது வரையிலான மற்றும் துல்லியமான தகவல் சேவைகள் விநியோகிக்கப்படுவதனை நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம். வங்கித்தொழில் மற்றும் நிதித்துறை இலங்கையின் பொருளாதாரத்தையும், குடிமக்களின் நலநோம்பலையும் அபிவிருத்தி செய்வதில் மிக முக்கியமான ஒரு வகிபங்கினை வகித்து வருவதனால் அத்துறை மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்கும் பொருட்டு நாங்கள் பணியாற்றி வருகின்றோம். இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் ஊழியர்களின் திறன்களை மேம்படுத்துவதற்கும், இத்தொழில் துறைக்குள் ஒரு தொழில்சார் மற்றும் தார்மீக பணிக் கலாசாரம் மற்றும் சூழல் என்பவற்றை மேம்படுத்துவதற்கும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளது.

உரிமம் பெற்ற அனைத்து அரச மற்றும் தனியார் வர்த்தக வங்கிகள், உரிமம் பெற்ற விசேட வங்கிகள், நிதிக் கம்பனிகள், குத்தகை கம்பனிகள் மற்றும் ஏனைய குறித்துரைக்கப்பட்ட அங்கத்துவ நிறுவனங்கள் என்பவற்றையும் உள்ளடக்கிய 79 பங்குதாரர்களுடன் இணைந்த விதத்தில் இலங்கை கொடுகடன் தகவல் பணியகம், ஒரு பணிப்பாளர் சபையினால் நிர்வகிக்கப்பட்டு வருகின்றது. இப்பணிப்பாளர் சபை பங்குதாரர் உறுப்பினர்களின் பதவி வழி அங்கத்தவர்கள், சம்பந்தப்பட்ட கடன் வழங்கும் பிரிவுகளின் பிரதிநிதிகள் மற்றும் நிதித்துறை தொழில்சார் நிறுவனங்களின் பிரதிநிகள் ஆகியோரை உள்ளடக்குகின்றது.


நோக்கு
“வாடிக்கையாளர் - நட்பு இயல்பிலான கடன் தகவல்களின் களஞ்சியமொன்றை கட்டியெழுப்புதல்”

இலங்கை கொடுகடன் தகவல் பணியகத்தில் எமது அனைத்து அங்கத்துவ நிறுவனங்களினதும் கடன்பெறுநர்கள் மற்றும் எதிர்காலத்தில் கடன்களை பெறக்கூடியவர்கள் ஆகிய அனைவரினதும் கடன் மற்றும் நிதித் தகவல்களை சேகரித்து, ஒப்பிட்டுத் தொகுத்து, பகிர்ந்தளிக்கின்றோம். வேண்டுகோளின் பேரில் நாங்கள் அத்தகைய தகவல்களை கடன்களை வழங்கும் எமது பங்குதாரர் நிறுவனங்களுக்கும், அத்தகைய தகவல்கள் பொருந்தக் கூடிய எவரேனும் தனிநபருக்கு அல்லது நிறுவனத்திற்கு நாங்கள் வழங்குகின்றோம். நாங்கள் சேகரித்து வைத்திருக்கும் கடன் பெறுநர்களின் தனிப்பட்ட தகவல்களின் மற்றும் கடன் சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தையும் அவர்கள் அணுகக்கூடிய உரிமையை எமது நடைமுறை வெளிப்படையாக உறுதிப்படுத்துகின்றது.

வளர்ச்சியடைந்த தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பத்தை பிரயோகிப்பதானது, இலங்கை கொடுகடன் தகவல் பணியகம் செயற்திறன் மிக்க தகவல் முகாமைத்துவம் மற்றும் செயன்முறை நிர்வாகம் என்பவற்றுக்கும் வசதி செய்து கொடுக்கும் அதேவேளையில், அதியுயர் மட்ட தரவுகளின் தரம், நம்பகத் தன்மை மற்றும் நாணயமான முறையில் தகவல்களை முறைப்படுத்தல் என்பவற்றை உறுதிப்படுத்துகின்றது. பிணைகளுடன் கூடிய கொடுக்கல் வாங்கல்களை பதிவு செய்வதற்கென பணியகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் இலத்திரனியல் முறையானது பொருளாதாரத்தின் அனைத்து துறைகளுக்கும், குறிப்பாக முறைசாராத் துறைக்கு கடன்களை விரிவாக்கி பகிர்ந்தளிக்கும் நோக்கத்திற்கு அனுசரணை வழங்குகின்றது. கொடுகடன் தகவல் பணியகத்தில் நாங்கள் எமது பாவனையாளர்களின் பன்முகப்பட்ட தகவல் தேவைகளுக்கு பொருந்தக் கூடிய விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கும் திட்டங்கள் மற்றும் சேவைகள் என்பனவற்றின் ஒரு தொகுதியை அபிவிருத்தி செய்ய முனைகின்றோம். எமது பங்குதாரர் கடன் வழங்கும் நிறுவனங்களின் கடன் மற்றும் அபாய முகாமைத்துவ நடைமுறைகளை விருத்தி செய்யும் நோக்கத்தில் திட்டவட்டமாக இவை வடிவமைக்கப்பட்டுள்ளன.

தென்னாசியாவின் ஒரு முன்மாதிரியான கடன் தகவல் பணியகமாகவும், 2025ஆம் ஆண்டிற்குள் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் எழுச்சியடைந்து வரும் கடன் தகவல் பணியகங்களில் ஒன்றாகவும் இருந்து வர வேண்டுமென்பதே எமது குறிக்கோளாகும்.